சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நமது ஈடிவி பாரத்திற்கு மருத்துவர் வீரபாபு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், ” கடந்த 3 ஆம் தேதி முதல் சாலிகிராமத்தில் தனித்த சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். இங்கு இதுவரை 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு முப்பதுக்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று 50 பேர் குணமாகி செல்கின்றனர்.
கரோனா பாதித்தவர்கள் சித்த மருத்துவ சிகிச்சை எடுத்த பின்னர், தீவிர சிகிச்சை நிலைக்கோ, ஆபத்தான நிலைக்கோ செல்வதில்லை. எனவே, நோயாளிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் சித்த மருத்துவ சிகிச்சையை முதன்மையாகவும், ஆங்கில மருத்துவ சிகிச்சையை துணையாகவும் அளித்தால் நல்ல பலன் தரும்.
பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு மாநகராட்சியால் அனுப்பி வைக்கப்படுபவர்களுக்கு மட்டுமே இங்கு சிகிச்சையளிக்கிறோம். சர்க்கரை, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ளனர். சிறு அறிகுறியுடன் உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவ சிகிச்சையை தொடங்கினால், இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடுகிறது.
சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர், தூதுவளை கலந்த உணவுகள், கற்பூரவல்லி ரசம், வேப்பம்பூ ரசம் போன்றவற்றை, எல்லோருக்கும் வழங்குகிறோம். கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு பானத்தை சூடாக மூன்று வேளை பருகினால், வைரசின் வீரியம் குறையும். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஓமம், கிராம்பு, மஞ்சள், கடுக்காய் தூள் இவையனைத்தையும் கலந்து அரைத்து பொடியாக்கி, 400 மில்லி தண்ணீரில் 10 கிராம் பொடியை கொதிக்க வைத்து, நூறு மில்லியாக சுண்ட வைத்து பருக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மக்களும் பெருமளவில் அதை பின்பற்றி வருகின்றனர். சித்த மருத்துவத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது “ என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் பொதுமுடக்கம்: மீளுமா தமிழ்நாட்டின் தலைநகர்