திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலான செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தடுப்பில் முன்னணியில் உள்ள களப்பணியாளர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. நான்காம் கட்ட ஊரடங்குக்கு பிறகும், இந்தியாவின் மொத்த நோய்த்தொற்றில் 10 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. சென்னையில் நோய் பரவல் அதிகமாக உள்ளது.
சென்னையில் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. நாட்டிலேயே கரோனா அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
தமிழக அரசின் பொறுப்பின்மையால் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சென்னைவாசியும் ஆபத்தில் உள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு மறைத்துவருகிறது. கடந்த நாள்களில் தமிழ்நாடு அரசு மறைத்துள்ள கரோனா மரணங்கள் குறித்து பத்திரிகைகள், ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
ஆனால் தமிழ்நாடு அரசு இறப்பு தகவல்களை மறைத்துவருகிறது. அரசின் தகவல்கள் சரியாக இல்லை. அதில், பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இந்தத் தகவல்கள் எல்லாம் அரசு சரிபார்த்துதான் வெளியிடுகிறதா? இறப்பில் கூட 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவித்து 85 நாள்கள் ஆகியும் மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறை கூட ஏற்படுத்தவில்லை. இதனிடையே, இறப்புகளின் எண்ணிக்கையை மறைக்க முடியாது என்கிறார் முதலமைச்சர். ஆனால், இறப்பு குறித்தான தகவல்கள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன.
இதில் அரசு உடந்தையாக செயல்படுகிறது. இந்த உண்மையை மறைக்க பல வேலைகள் செய்யப்படுகின்றன. இதற்கு மத்தியில் இறப்பு பற்றி விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகள் குறித்து விசாரிக்க கமிட்டி மட்டுமே ஒரே தீர்வாகிவிடுமா?
மேலும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட முதல் கமிட்டி ஏதேனும் அறிக்கை வெளியிட்டதா? அதன்பின்னர் இரண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி செய்த நடவடிக்கை என்ன? கரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டதா?
இது போன்ற ஏராளமான குளறுபடிகள் உள்ளன. ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கோயம்பேடு தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா இது தொடர்பான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.
கரோனா தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து அரசியலை மறந்து, திமுக மக்கள் நலனில் கவனம் செலுத்திவருகிறது. இந்த விஷயத்தில் திமுக முழுமையான கவனம், ஆக்கப்பூர்வமான தகவல்களை அரசுக்கு தொடர்ந்து வழங்கிவருகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசு இதனை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. முதலில் நாங்கள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய சொன்னோம். ஆனால் அதன் பின்னர் செய்தார்கள். அதேபோல் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் நடமாடும் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தினோம். முதலில் மறுத்துவிட்டு தற்போது செயல்படுத்திவருகின்றனர்.
இது போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க துல்லிய தகவல்கள் முக்கியம். அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.
- கரோனா சமூக பரவல் இல்லையெனில், மாநிலத்தில் தொடர்ந்து பாதிப்பாளர்கள் அதிகரிப்பது ஏன்?
- கரோனா பாதிப்பை குறைக்க செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
- ஊரடங்கு காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பொதுதளத்தில் இல்லை? மக்களை இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாற்ற போறீங்க?
- எதிர்க்கட்சிகளுடன் பேச அரசு மறுக்க காரணம் என்ன?
- நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, வேலையில்லாத திண்டாட்டத்தை போக்குவதில் எப்போது அரசு கவனம் செலுத்தும்?
இது அரசியல் கேள்வியோ, அரசியலுக்கான கேள்வியே அல்ல. இது மக்களின் கேள்வி. இதற்கு அரசு நேர்மையான பதிலை கொடுக்க வேண்டும். மக்களின் உயிரை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. கரோனா முறைகேடு, குளறுபடி, குழப்பங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும். ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்கள வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அமைச்சர்களுக்கு இடையேயான தன்முனைப்பு சண்டை முடிவுக்கு வர வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாக முடிவு காணப்படவில்லையெனில் திமுக நீதிமன்றத்தை அணுகும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நெருக்கடி: ஆந்திரா கோயில்களில் சிறப்பு யாகம்!