சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜன.21 ஆம் தேதியான இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் புதிதாக கரோனா தொற்றானவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 29 ஆயிரத்து 870 என உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 33 பேர் இறந்துள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87ஆயிரத்து 358 என உயர்ந்துள்ளது.
புதிதாக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 54 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலிருந்த 29 ஆயிரத்து 848 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 22 நபர்கள் என 29 ஆயிரத்து 870 பேருக்கும் கரோனா வைரஸ் கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை
இதுவரை தமிழ்நாட்டில் 5 கோடியே 93 லட்சத்து 2 ஆயிரத்து 389 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால், 30 லட்சத்து 72 ஆயிரத்து 666 நபர்கள் கரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 358 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குணமானவர்களின் எண்ணிக்கை
அவ்வாறு சிகிச்சையில் இருந்த நோயாளிகளில் 21 ஆயிரத்து 684 பேர் குணமானதைத் தொடர்ந்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 48 ஆயிரத்து 163 என உயர்ந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 21 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 12 நோயாளிகளும் என மேலும் 33 நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 145 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக தொற்று
சென்னையில் மட்டும் ஜன.18ஆம் தேதியன்று 8,305 என இருந்த கரோனா பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. அதன்படி, இன்று 7,038 பேருக்கு தொற்று என்று பதிவாகியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் கோயம்புத்தூரில் 3,653 பேருக்கும் செங்கல்பட்டில் 2,650 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,648 பேருக்கும், சேலத்தில் 1,009 பேருக்கும், திருவள்ளூரில் 1,016 பேருக்கும், மதுரையில் 903 பேருக்கும், ஈரோட்டில் 973 பேருக்கும் திருப்பூரில் 958 பேருக்கும் என்று தொற்று உறுதியாகியுள்ளது.
ஏனைய பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
நோய்ப் பரவல் விகிதம்
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நோய்ப் பரவல் வீதம் 18.4 என உள்ளது. சென்னையில் மட்டும் 25 %, கோயம்புத்தூரில் 24.8 %, செங்கல்பட்டில் 24.7 %, தேனியில் 23.1 %, எனவும் திருவள்ளூரில் 24.7 % எனவும் திருநெல்வேலியில் 24.7 % எனப் பாதிப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, ஆக்சிஜன் படுக்கையில் 4,555 பேரும், சாதாரண படுக்கையில் 4,040 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,095 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகள் சேர்க்கப்படுவதால் படுக்கைகளின் எண்ணிக்கை 66,612 என காலியாக உள்ளது.
அதேநேரத்தில் மருத்துவமனையுடன் இணைந்து தனிமைப்படுத்தும் மையங்களில் 41 ஆயிரத்து 364 படுக்கைகள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் வேலை