Corona impact: கரோனா தொற்றின் தாக்கம் சென்னையில் குறைய தொடங்கியிருந்தாலும், சில மண்டலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை பாதிப்பு 30 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைந்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் டிசம்பரில் 100 நபரில் ஒருவர் என்ற விகிதத்திலிருந்த இறப்பு, தற்பொழுது ஆயிரம் நபர்களில் ஒருவர் என்ற விகிதத்தில் குறைந்துள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி 10 மாதங்கள் கடந்து பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்குப் பாதிப்பு அதிகளவில் கண்டறியப்படுகின்றன.
எனவே முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா இரண்டாவது அலையில் 500 மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்த ஆக்ஸிஜன் தேவை தற்போது குறைந்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் உயர்ந்து தற்போது இறங்கியுள்ளது. இருந்தாலும் சோழிங்கநல்லூர் மணலி அம்பத்தூர் மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்று பரவலை குறைப்பது சவாலாகவே உள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை மூலமே சென்னையில் கரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற மாவட்டங்களில் தாக்கம் அதிகரித்து பின்னர் இறங்குமுகமாக வர வாய்ப்புள்ளது.
மருத்துவர்களில் சிலர் தங்களுக்கு காய்ச்சல் வந்துள்ளது என பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை காலம் கழித்து வருகின்றனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது சவாலான காரியமாகவே உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 100 விமானங்கள் குறைக்கப்பட்டன!