சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பாலமுரளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஹர்ஷவர்தினி, நிஷாந்த் என்ற மகளும் மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் கரோனா ஏற்பட்டு உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது மனைவி கவிதா தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகிய மூன்று பேருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளியின் மனைவி முதலமைச்சருக்கு கடிதம் அதில், காவல் ஆய்வாளராக பாலமுரளி பணியாற்றிக் கொண்டிருந்தபோது வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவந்ததாகவும் தற்போது ஓய்வூதியம் பெற்று அதன்மூலம் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருவதாகவும் கூறியுள்ள அவர், இந்த நிலையில் தாங்கள் வசித்துவரும் காவலர் குடியிருப்பை காலிசெய்யுமாறு சிலர் நிர்பந்தித்துவருவதாக வேதனை தெரிவித்தார்.மேலும், தனது மகன் தற்பொழுது எட்டாம் வகுப்புப் படித்துவருவதாகும் மகனின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என மொத்தம் எட்டு ஆண்டுகள் படிப்பு முடியும்வரை தங்களின் குடும்பத்தை குடியிருப்பில் தங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
தற்போது செலுத்திவரும் அதே காவலர் குடியிருப்புக்கான வாடகை, மேலே குறிப்பிட்ட எட்டு ஆண்டுகளுக்குச் செலுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், தங்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.