சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இறப்பு சான்றிதழ் திருப்தி அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து காரணத்துடன் இறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மற்றும் தமிழ்நாடு முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளார் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969ஆம் ஆண்டின் படி, கட்டாயமாக இறப்பு பதிவு செய்யப்பட வேண்டும். அதில் 2000ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அமலில் உள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, இறப்பின் காரணம் "கோவிட்-19" எனக் குறிப்பிட்டு அதிகாரப் பூர்வ ஆவணம் வழங்குவதற்கான எளிமையான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கோவிட்-19 இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வுசெய்து, அதிகாரப்பூர்வ சான்றிதழை கோவிட்-19 தொற்றால் இறப்பவர்களுக்கு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றினால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்" என அதில் கூறியுள்ளார்.