கரோனா தீநுண்மி பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம், வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தினர்.
இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக்கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப் பரிசீலித்த மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை ஏற்க முடியாது என மே 2ஆம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில், மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், கணவரின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனது கோரிக்கையை நிராகரித்த சென்னை மாநகராட்சி உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமெனவும், மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம். துரைசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நான்குவார கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: என்னை இங்கே புதையுங்கள்... டாக்டர் சைமனின் கடைசி ஆசை!