சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு (51). இவர் நேற்று முன்தினம் (மார்ச் 11) இரவு இருசக்கர வாகனத்தில் தனது பெண் தோழியுடன் எழும்பூர் பகுதிக்கு சென்றார். அப்போது எழும்பூர் பாந்தியன் சாலை வழியாக சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வழிவிடாமல் நின்றதால், பாபு ஒலி எழுப்பியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து பாபுவிடம் தகராறில் ஈடுபட்டதுடன், எதிர்பார்த்திராத நிலையில் அவரை சரமாரியாக தாக்கினார். இதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த எழும்பூர் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்த சேவியர் (44) என்பதும், தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அத்துடன் காவலர் சேவியர் திடீரென ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறையினர் அவரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த பாபு அளித்த புகாரின் பேரில் தலைமை காவலர் சேவியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டதுடன், ஆய்வாளரை தாக்க முயன்ற தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்...முதலமைச்சரை டார்கெட் செய்யும் அமலாக்கத் துறை?