குழந்தைகள் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க பயன்படுத்துவது, குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்துவது, திருமணங்களுக்காக கடத்தப்படுவது எனக் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 'ஆப்பரேஷன் ஸ்மைல்' என்ற திட்டம் 2015இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தற்போதைய செயல்பாடு குறித்து ஆலோசிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால் வினா ஐஏஎஸ், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், குழந்தை நல ஆர்வலர்கள் கலந்துகொண்டு பேசிய, காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கப்பட்டு 2,000 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். சென்னையில் 2010ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை காணாமல்போன எட்டாயிரத்து 110 குழந்தைகளில் ஏழாயிரத்து 994 குழந்தைகள் காவல் துறை மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.