சென்னை: தி.நகரிலுள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்மையில் செய்யப்பட்டுள்ள கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடியில் ஏராளமான முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
நகை கடனுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய்வரை கடன் தர முடியும் என்ற நிலையில் 2 கோடி ரூபாய்வரை கடன் பெற்றுள்ளனர். நகைகளை அடகு வைக்காமல் கூட சிலர் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
போலி நகைகளை வைத்தும் சிலர் கடன் பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் பல மாதங்களாக இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முறைகேடாக பயிர்க்கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிபிசிசிஐடி விசாரணை
இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு நிறுவனங்களில் கூட்டு கொள்ளை நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிசிசிஐடி விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
அரசு உதவி இல்லாமல், ஆளும் கட்சி உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெறுவது சாத்தியமில்லை. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ‘கலைஞர் நூலகம் நவீன முறையில் அமையும்’ - அமைச்சர் மூர்த்தி