தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டுமே சுமார் 200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் பதியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னைப் பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையில் பாதி மட்டுமே, சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி நிலவரப்படி, கரோனா வைரசால், 460 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறையின் கணக்கின்படி 224 பேர் மட்டுமே மரணித்துள்ளதாக பதியப்பட்டுள்ளது. இதற்கு அரசுத் தரப்பில், பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
முன்னதாக, கரோனா தொடர்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பெரும்பாலும் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன், மருத்துவமனையில் நிகழாத உயிரிழப்புகளைப் பதிவு செய்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
உயிரிழப்பு குளறுபடி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உயிரிழப்பு எண்ணிக்கை ஏற்பட்டுள்ள குழப்பம் நிர்வாக ரீதியிலானது எனவும் இதை சீர் செய்ய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன எனவும் மருத்துவமனைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தொடர் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
கரோனா சிகிச்சை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை விவரம், உயிரிழப்பு ஆகிய புள்ளிவிவரங்களை முறையாக அரசு பதியவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
நாட்டிலேயே அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் மாநிலமான தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் தேவை அரசுக்கு இல்லை எனவும் இதை மறைப்பதற்கான வாய்ப்பே இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த குளறுபடி தொடர்பான உண்மை நிலை சிறப்பு குழுவின் அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். கரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன்களை அளித்துவரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையை பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும், கரோனா தொற்று பரவலைத் தடுக்க முழுவீச்சில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 5 மாதத்தில் 3 எம்எல்ஏக்கள் மரணம்; அன்றே கவலைப்பட்ட துரைமுருகன்; திமுகவுக்கு தொடரும் சோகம்!