வங்கிகளுக்கு அலைந்து திரிந்து கடன் பெறும் நிலை மாறி, இருந்த இடத்திலிருந்தே இரண்டே நிமிடங்களில் மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெறுவது இப்போது வழக்கமாகியுள்ளது. அதே நேரத்தில் அதனால் ஏற்படும் நெருக்கடிகளும், அதே வேகத்தில் பின் வந்து விடுகின்றன. அப்போதைய தேவையை சுலபக்கடன் தீர்ப்பதாக எண்ணி, பின்னர் வட்டி மேல் வட்டி போன்ற பல பிரச்சனைகளுக்கு, அங்கீகாரமற்ற மொபைல் கடன் ஆப்கள் காரணமாகி வருகின்றன. இதனால் பணம் போனால் பரவாயில்லை. உயிருமல்லாவா போய் விடுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், பழையனுார் சாலையை சேர்ந்த இளைஞர் விவேக், சில நாட்களுக்கு முன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காரணம், வெறும் நான்காயிரம் ரூபாய் கடன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விவேக், தந்தையின் மருத்துவ செலவுக்காக ஆன்லைன் கடன் வழங்கும் செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு வாரம் ஒன்றிற்கு 300 ரூபாய் வட்டி. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் கடனையும், வட்டியையும் திருப்பி செலுத்த முடியாமல் போகவே, கடன் வழங்கிய நிறுவனம், விவேக்கை பல வழிகளிலும் தொந்தரவு செய்துள்ளது.
அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும், விவேக் கடன் வாங்கி ஏமாற்றி வருவதாக குறுஞ்செய்திகளை அனுப்பி அவமானத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான விவேக், ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்தில் செய்வதறியாது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு ஒரே மகனான விவேக்கை இழந்து அக்குடும்பமே தற்போது கதறி நிற்கிறது.
கடந்த நாட்களில் இதேபோன்ற கடன்களால் சிலை தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இவ்வகை கடன் செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது, மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், குறுஞ்செய்திகளை பார்க்க என, பல வகைகளில் நமது அனுமதியைக் கேட்கும். அவற்றை நாம் அனுமதிப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் தொழில் நுட்ப வல்லுநர்கள். ஆனால், கடன் மற்றும் சூதாட்ட செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்பதே துறை சார் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 60 லோன் ஆன்லைன் செயலிகளும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத செயலிகளாகும். இச்செயலிகளை பயன்படுத்துவோரின் தகவல்களை திருடி, சட்ட விரோத செயல்களில் அவை ஈடுபடுவதாகவும், எனவே அங்கீகரிக்கப்படாத செயலியை பயன்படுத்தவோ, அவற்றில் ஆதார் கார்டு, வங்கி விவரங்களை வழங்கவோ கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். லோன் பெற்ற பின்பு அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகாரளிக்க கூறுவதோடு, கடன் செயலிகளின் உண்மை தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிப்பார்க்க வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன் கிடைப்பதாக கருதி, அங்கீகாரமற்ற மொபைல் ஆப்கள் மூலம் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்றும், அது சட்ட விரோதம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரமற்ற லோன் ஆப்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 2020இல் சைபர் கிரைம் புகாரில் 62 விழுக்காடு நிதி மோசடி புகார்!