சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரியின் 70ஆவது பிறந்தநாள் விழா, வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கே.எஸ். அழகிரி படம் கொண்ட ராட்சத கேஸ் பலூனை அக்கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வானில் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளரைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "கே.எஸ். அழகிரியின் 70ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ராட்சத கேஸ் பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை விவகாரம்
வரும் 22ஆம் தேதி பிறந்தநாள் அன்று, இரண்டாயிரம் நபர்களுக்கு உணவு, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். எழுபதாவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 70 கிலோ கேக் வெட்டப்படும்" என்றார்.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளரை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சென்னை ஐஐடியில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது குறித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன. அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகின்றன.
பாசிச உணர்வுடன் செயல்படும் பாஜக
ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் இதுவரை இது குறித்துப் பேசவில்லை, பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லவில்லை. பத்திரிகையாளர்களை அவமதித்துப் பேசுவதுதான் பாஜக தலைவர்களின் வழக்கம். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை விதிவிலக்கு அல்ல.
குழந்தை இறந்துபோனால் நாய்க்குட்டி இறந்துபோவதுபோல் என்பார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் இது சாதாரண நிகழ்வு என்றும் கூறுவார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. தொடர்ந்து, பாசிச உணர்வுடன் செயல்படுகிறது, அது கல்விக்கு எதிரான கட்சி" என அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டினார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளித்தும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. சட்ட ஆலோசனை கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமருடன் ஆலோசித்த அமித் ஷா