உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த 3ஆம் தேதி ஹத்ராஸ் புறப்பட்டனர். ஆனால் அவர்களை வழியிலேயே மறித்த அம்மாநில காவல்துறை, ராகுலை கீழே தள்ளியும், பிரியங்காவை கையை பிடித்தும் இழுத்தனர்.
உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் இச்செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை பல்லவன் சாலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ஹத்ராஸில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, உயிருக்கு போராடிய சூழலிலும் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்த அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் மீது இப்படிப்பட்ட அராஜகம் நிகழ்த்தப்பட்டது இல்லை. அந்தளவிற்கு நாகரிகமின்றி காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: ராகுலின் ஆடம்பர பேரணிகள் வரவிருக்கும் தேர்தலுக்கானது - விவசாயிகள் விமர்சனம்