சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் காஷ்மீர் உரிமைப்பறிப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் இந்தியக் குடியரசைச் சேர்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது சந்தேகம் பாஜக அரசுக்கு வந்துள்ளது. சர்தார் வல்லபாய் படேல் நம்முடைய தலைவர். சுதந்திர வரலாற்றில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தலைவரே கிடையாது. அதனால் நம்முடைய தலைவர்களைத் திருடுகிறார்கள். மக்கள் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அனைத்தும் மக்கள் கருத்துகளைக் கேட்டுச் செயல்படுத்தவேண்டும்.
இலங்கையில் எவ்வாறு தமிழ் மக்கள் கூடுதல் அந்தஸ்து கேட்கிறார்கள். அதேபோலத் தான் காஷ்மீர் மாநிலம். இலங்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன? தமிழ் மக்களுக்குத் தனி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பது தான். அதைத் தானே காஷ்மீர் மக்கள் கேட்கிறார்கள். காஷ்மீர் மட்டும் குறி வைப்பதற்குக் காரணம் மத வெறிதான். இதுவே காஷ்மீர் இந்துக்கள் பெரும்பான்மையான இடமாக இருந்தால் இதை பாஜக செய்திருக்காது. பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் கண்ணுக்கு உறுத்துகிறது. அரசியல் ஒழுங்கை மீறிய நடவடிக்கை இது. ரெளலட் சட்டம் போன்று அங்கு நடந்து வருகிறது.
நாளை தமிழகம் ஒன்றிய பிரதேசமாக மாற்றினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அதிமுக சும்மா தான் இருக்கும். மாநிலங்களவையில் பாஜகவுக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைத்தால், நான் உறுதியாகக் கூறுகிறேன், அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மாநில, மொழி, கலாச்சார உரிமை இதையெல்லாம் பாதுகாப்பதற்குக் காங்கிரஸ் கட்சி விட்டால் வேறு யாரும் இல்லை. மொழி, இனம், மதம் உரிமைகள் நிச்சயமாக நிலைநாட்டப்படும். ஜம்மு காஷ்மீர்க்குச் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கிடைக்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும் எனத் தெரிவித்தார்.