சென்னை: கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதையடுத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அலுவலரும் பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இதைப்போல் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் முதல், இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வரவேண்டும் என்ற முந்தைய உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. எனினும் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும் - செல்லூர் ராஜூ