புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் இக்பால் பாஷா. இவரது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த ஜனவரி 4ஆம் வழக்கம்போல் மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது மாணவி ஹிஜாப் அணிந்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, வகுப்பிற்குள் அனுமதிக்க தலைமை ஆசிரியர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஹிஜாப் அணிய கல்வித் துறையில் அனுமதி வேண்டும் எனக் கூறி மாணவியை வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
பிரிவினையை ஏற்படுத்தும் தலைமையாசிரியர்
இது குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். முறையாகப் பதிலளிக்காததன் காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளுடன் கல்வித் துறை அலுவலர்களை மாணவியின் பெற்றோர் சந்தித்து முறையிட்டனர்.
அப்போது கல்வித் துறை அலுவலர் மீனாட்சிசுந்தரம், பள்ளி முதல்வரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 9) புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமூக இயக்கங்கள் சந்தித்தன.
அப்போது மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
தலைமையாசிரியருக்கு குவியும் கண்டனங்கள்
மனு அளித்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாணவியின் பெற்றோர், "அனைத்து சமுதாய மக்களுடன் உறவு ரீதியாகப் பழகிவருகிறோம். எங்களுக்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியரின் செயல் அமைந்துள்ளது. எனது மகள் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்தான் படித்துவருகிறார்.
அப்போதெல்லாம் பர்தா அணிந்துதான் செல்வார். இப்போது மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என மறுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆகையால் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், புதுச்சேரி பள்ளி முதல்வரின் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: 'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!