புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப வன்முறை காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்னர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்குத் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சண்முகம், புகாரளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் மனு அளித்துள்ளார். இருப்பினும் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் இது குறித்து உயர் அலுவலர்களிடம் இளம்பெண் புகாரளித்துள்ளார். இதனையடுத்தே சண்முகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
வழக்கைத் திரும்பப் பெறக் கோரி காவலர் பொதுநல இயக்கத் தலைவர் கணேசன் உள்ளிட்ட ஐவர் இளம்பெண்ணின் தாயாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மிரட்டலில் ஈடுபட்டோருக்கு ஆதரவாகச் செயல்படும் சிபிசிஐடி ஆய்வாளர் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்கள் அமைப்பினர் புதுச்சேரி காவல் துறை கூடுதல் தலைவரிடம் நேற்று (டிசம்பர் 15) புகாரளித்தனர்.
இது குறித்து இறைவி பெண்கள் அமைப்பு தலைவி காயத்ரி பேசுகையில், “பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதற்குப் பதிலாக தலைமை அவரைக் காப்பாற்றும் வகையில் மிரட்டல் விடுத்த காவலர் பொதுநல இயக்கத் தலைவர் கணேசன், குடியிருக்கும் வீட்டை காலி செய்யக்கூறி மிரட்டும் சிபிசிஐடி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்