சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில் (ARC காமாட்சி ஜுவல்லர்ஸ்) மேலாளராக பணியாற்றி வருபவர், சிவகுமார். இவர் தன்னை நகைக்கடை திருட்டு வழக்கில் சேர்த்து நற்பெயரை கெடுப்போம் என மிரட்டி, 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களைச்சந்தித்த சிவகுமார் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர், கடந்த 10ஆம் தேதி காலை தங்கள் கடைக்கு நுங்கம்பாக்கம் காவல் துறையினர் எனக்கூறி வந்த இருவர், திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுள் சில உங்கள் கடையில் வாங்கியது என்பதால் விசாரணைக்காக காவல் நிலையம் வரவேண்டும் எனக்கூறி தொலைப்பேசி எண்ணை பெற்றுச் சென்றனர்.
பின்னர் மாலை தொடர்புகொண்டு இரவு 8 மணிக்கு காவல் நிலையம் வரும்படி கூறியதாகவும், அவர் சொன்ன நேரத்திற்கு காவல் நிலையம் சென்றபோது உதவி ஆணையர் இருப்பதாகவும், அவர் சென்ற பிறகு அழைப்பதாகவும் கூறி காவல் நிலையம் அருகே ஒரு தெருவில் காத்திருக்கச்சொல்லிவிட்டு, பின் சுமார் 10.30 மணிக்கு உதவி ஆணையர் சென்றபிறகு காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளர் அறைக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
லஞ்சத்திற்குப்போட்ட அடி: தங்களிடம் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறி செல்போனில் பேசிய நபர் சொன்னபடி, காவல் நிலையம் சென்றபோது அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி, தங்களால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நேபாள பெண்மணியிடம் உங்கள் கடை நகை உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் உங்கள் கடை பெயரை சேர்த்து கடைக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருக்க தங்களை கவனிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், தங்கள் கடைக்கு காவல் துறையினர் எனக்கூறி வந்த இரு நபர்களை சுட்டிக்காட்டி அவர்கள் சொல்லும்படி செய்தால் உங்களுக்கு பிரச்சனை வராது என நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி கூறியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய நகைக்கடை மேலாளர் சிவகுமார், “அவ்விருவரும் காவல் ஆய்வாளருக்கு 1.5 லட்சம் ரூபாயும், தங்கள் இருவருக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்யும்போது உங்கள் கடை பெயர் இருக்காது எனக்கூறினர். தங்கள் கடையில் நகை வாங்கும் யாராக இருந்தாலும் தங்கள் நிறுவனத்தின் பெயர் பொறித்த நகையைத் தான் கொடுப்போம் என மிரட்டினர்.
இதில் எங்கள் மீது தவறு இல்லை. சம்மந்தப்பட்ட நபர் நகை வாங்கிய தேதியை சொன்னால் அதற்கான ரசீதுகளைக் கூட எடுத்து சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதைப்பொருட்படுத்தாமல் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட மூன்று பேர் மிரட்டல் விடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதில் சம்மந்தப்பட்ட கடைக்கு வந்த இரு நபர்களின் சி.சி.டி.வி பதிவுகள் மற்றும் தொலைபேசியில் பேசிய ஆடியோ பதிவுகளுடன் சம்மந்தப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட 3 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனியார் நகைக்கடை மேலாளர் சிவக்குமாரை மிரட்டிய மெல்வின், தங்கராஜ் ஆகிய 2 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு, தற்போது இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் மாற்றியுள்ளார்.
மேலும் காவல் ஆய்வாளர் ரோகிணியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் எனக் கூறி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!