சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும், திரித்து கூறியும் படமெடுத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உண்மைக்கு புறம்பாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரித்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருக்கும் சோழப்பேரரசின் உண்மையான வரலாற்றை மறைத்து தவறிழைத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்; முதல் நாள் வசூல் ரூ.80 கோடி