சென்னை: சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினரின் பட்டதாரி குழந்தைகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை காவல் ஆணையர் வழங்கி சிறப்பித்தார்.
படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம், வேலை வாய்ப்பு முகாம் மற்றும் நேர்முக தேர்வு நடத்தி தனியார் நிறுவனங்களில் கல்வித்தகுதிக்கேற்ப வேலைக்கு 81 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான பணி நியமன ஆணையை இன்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரும், மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் பங்கேற்று பணிநியமன ஆணையை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் பேசுகையில், "சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினரின் குழந்தைகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலையை பெற்று கொடுப்பதற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். கல்லூரி படித்து முடித்து வந்தவுடன் மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறோம்.
இத்துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம். 10,664 பேருக்கு ஜூன் மாதத்தில் இருந்து வேலைவாய்ப்பு பெற்று கொடுத்துள்ளோம். காவல் துறையினரை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களது குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினோம். இளைஞர்களுக்கு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து அளித்து வருகிறோம்" என்று பேசினார்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசுகையில், "காவல்துறையினரின் குடும்ப நலன் முக்கியமானது. 24 மணி நேரமும் காவல் துறையினர் பணி செய்து வருகின்றனர். குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க முடியாது.
தற்போது 81 பேருக்கு பணி கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர் தான். காவல் துறை மீதான ஈடுபாடு, நேர்மை, உழைப்பு ஆகியவை தான் தங்களுடைய குழந்தைகளுக்கு பணி கிடைக்க காரணம்.
கரோனா காலத்தில் 81 பேருக்கு பணி கிடைத்து இருப்பது பெரிய காரியம். காவல் துறையினரின் குடும்ப நலனை நாங்கள் பார்த்து கொண்டால், பணியில் இருப்பவர்கள் இன்னும் முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியை செய்வார்கள்.
புயல் காலத்தில் மக்களுக்கு சிறப்பான காவல் துறையினர் பணி செய்துள்ளனர்.
கைப்பேசி திருடனை துரத்தி பிடித்த உதவி ஆய்வாளர் தான் உண்மையான ஹீரோ. உங்களுக்கு இது தொடக்கம். நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யுங்கள்.
காவல் துறையினர் குடும்பம் என்பதால் தனியார் நிறுவனத்தினர் உங்களை நம்புகின்றனர். நம்பிக்கை காப்பாற்றுங்கள்" என்று பேசினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், அமல்ராஜ், தேன்மொழி, இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு மற்றும் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.