சென்னை: கே.கே நகர் 80 அடி சாலையில் நடைபாதை ஓரமாக பல இளநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் லிங்கம் என்பவருக்குச் சொந்தமான இளநீர் கடையும் உள்ளது. இவர் சென்னை கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி லாரி மூலம் கொண்டுவரும் இளநீர் காய்களை வாங்கி தன் கடையின் அருகில் சுவற்றின் ஓரமாக தார்ப்பாய் மூலம் மூடி வைத்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
சிசிடிவியில் சிக்கினார்
வழக்கம் போல் கடையை திறக்கும் போது இளநீர் காய்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 50க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் லிங்கம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினரிடம் லிங்கம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணையில் இதேபோன்று அப்பகுதியில் உள்ள இளநீர் கடைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இளநீர் காய்கள் மாயமானது தெரியவந்துள்ளது.
கோயம்பேட்டில் தனிக்கடை
இந்நிலையில், அதே திருடன் மற்றொரு நாள் நள்ளிரவில் மீண்டும் லிங்கம் இளநீர் கடைக்கு திருட வந்த போது பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அவரை விசாரித்ததில், அதே பகுதிகளில் இளநீர் கடை வைத்து நஷ்டமான ரஜினிகாந்த் என்பவர்தான் திருடியது என தெரியவந்துள்ளது. இதுபோன்று பல கடைகளில் 500க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை திருடி, கோயம்பேட்டில் தனியாக கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா?