சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அன்பு சகோதரர் சீமானின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தாயைப் போற்றும் அதே நேரத்தில், தந்தை வழி குடி மரபைத் தான் நாம் பின்பற்றி வருகிறோம். தந்தை வழியில் மரபுகளை அமைத்துக் கொள்வது நமது பண்பாடு. பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள சீமானின் தந்தையின் மறைவு வேதனையளிக்கிறது" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.