சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுப் பெற்ற தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்தோடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நலத்திட்டம்
இதற்கிணங்க, முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாகக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கினார்.
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பணிவாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக்கூடாது என்ற எண்ணத்தோடு, 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 தொழிலாளர்களுக்கு, ரூ.6.66 கோடி மதிப்பீட்டில் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் முதலைமச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் பங்கேற்றோர்
இவ்விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் என அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.