சென்னை: பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளதால் கரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காலதாமதமாகி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இன்று(ஜூலை 29) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,"குரோம்பேட்டையில் 'ரோபாட்டிக்ஸ்' மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் தொடங்கியிருக்கும் முகம்மது ரேலா என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பவர் எனக்கும் இன்னும் பெருமையாக உள்ளது.
கரோனா என்ற கொடிய வைரஸ் நாட்டு மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மாநில அரசு கரோனா வைரஸ் பரவல் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொது மக்களிடம் விழிப்புணர்வு குறைவாகத் தான் உள்ளது.
இதன் காரணமாக தான் கரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காலதாமதம் ஆகிவருகிறது. சர்வதேச அளவில் மருத்துவத் திட்டத்தைத் தமிழ்நாட்டிற்கு அமல்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
அதேபோன்று தான் தற்போது இந்த ரேலா மருத்துவமனையும், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தநிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை இயக்குனர் முகம்மது ரேலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லீரல் தானம் அளிப்பவர்களுக்கு தழும்பில்லா 'ரோபோட்டிக்ஸ்' சிகிச்சை முறைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் மருத்துவமனையாக சென்னை குரோம்பேட்டை ரேலா தனியார் மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூலை 29) ரேலா மருத்துவமனையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அதனால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(ஜூலை 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரோனா தொற்று அதிகப்பை கருத்தில் கொண்டு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.