சென்னை: முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர், கவிதா. இவர் இன்று (நவ.02) காலை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவின் அருகே போக்குவரத்து தணிக்கைப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அருகிலிருந்த பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து கவிதா மீது விழுந்தது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். இந்த விபத்தில் காவலர் முருகன் காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டை காவல் துறையினர், உயிரிழந்த கவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி
இந்நிலையில், உயிரிழந்த காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவலர் கவிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, மருத்துவமனையில் இருந்த காவலர் கவிதாவின் மூன்று குழந்தைகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்
காவலர் கவிதா இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், 'சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சரிந்து விழுந்ததில், காவலர் கவிதா உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.

மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு முழுவதும் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்