பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை சீரமைத்திட ரூ. 5 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 29) ஆய்வு செய்தார். வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின்போது மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மேயர் பிரியா முதலமைச்சருடன் இருந்தனர். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். வரும் பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.
அந்த வகையில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 915 மீட்டர் வடிகால் பணிகள், காந்தி தெரு, சீதாபதி நகர் 2ஆவது குறுக்கு தெருவில் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 மீட்டர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால்; ரூ.186 கோடி ஒதுக்கீடு