சென்னை: மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி, பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் குடிலையும் திறந்து வைத்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர், "சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு உள்ளது. சிறுபான்மையினர் ஏற்றம் பெறக் கூடிய காலமாக திமுக ஆட்சி காலம் தொடங்கியுள்ளது.
வழிபாடு
நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள். ஆனால், வழிபாடு என்பது அவரவர் விருப்பம். ஒரு வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனியாக பிறந்த தமிழ் சகோதரர்கள்தான் நாம். கிறிஸ்துவம் உள்ளிட்ட எல்லா மதமும் அன்பை போதிக்கின்றது. அன்பு என்பது சாதி, மத, மொழி, இனம், பால் வேறுபாடு பார்க்காது. இதில், பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட கூடியவர்கள்.
ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் பார்த்து பார்த்து தாயை போல திட்டம் போட்டு நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஆட்சிப்பொறுப்பேற்று ஐந்து மாதங்களில் செய்துள்ளோம்.
வாக்குறுதிகள்
500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் வழங்கினோம். அதில், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தற்போதே நிறைவேற்றியுள்ளோம் என்பதை இங்கு பெருமையுடன் கூறுகிறேன்.
நிதிச் சுமை இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை, திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருகிறோம். நாங்கள் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் செய்துள்ளோம். என்னையும் உங்களையும் நான் ஏமாற்ற தயாராக இல்லை. ஆனால், நிச்சயம் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம். அதில், சந்தேகம் வேண்டாம்.
அனைவரது கோரிக்கைகளையும் தாயுள்ளத்தோடு செய்து வரும் தமிழ்நாடு அரசு, மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. அன்பு ஒன்று தான் இந்த வாழ்கையின் சட்டம். அந்த சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும். அந்த உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்தது என்பதை பெருமையுடன் கூறுகிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த பணிகளை விளக்கும் வகையில் சிறப்பு காணொளி திரையிடப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார். அப்போது, "திரையில் திரையிடப்பட்ட முதலமைச்சரின் பணி குறித்த காணொளியை பார்க்கும்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என் நினைவுக்கு வந்தார்.
பாதுகாவலர்
கலைஞர் இந்த விழாவிற்கு வருவதை எந்த அளவு விருப்பபடுவார் என்பது எனக்கு தெரியும். சமூக நீதியை இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைத்த பெருமை இயேசுவை சேரும்.
தமிழ்நாட்டில், சிறுபான்மையின மக்களின் பாதுகாலளராக மு. க.ஸ்டாலின் இருப்பதால்தான் தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கின்றனர். அதை நாங்கள் மனப்பூர்வமாக உணர்கிறோம். சிறுபான்மையினர் மாண்புடன் வாழக்கூடிய சூழல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உள்ளது.
ஓபிஎஸ் மன்னிப்பு
கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். ஓபிஎஸ் அங்கிருந்தவர்களிடம், 'தெரிந்தோ, தெரியாமலோ தாங்கள் செய்ததை மன்னித்து தங்களை அரவணைத்து கொள்வதைதான் கிறிஸ்து நாதர் சொன்ன தர்மம்' என கூறுகிறார். அவர் யாருக்கு சொல்கிறார், எதற்கு சொன்னார் என்றே தெரியவில்லை". என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், செஞ்சி மஸ்தான், மா. சுப்பிரமணியன், பொன்முடி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஏராளமான மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கினார்.