புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த செய்தியாளர் கூட்டம், சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று (ஆக.23) நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 'புதுச்சேரியில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்.
ஆசிரியர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி
மேலும் 9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒருநாளும், 11 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மற்றொரு நாளிலும் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நடந்துகொள்ள வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் முழுமையாக இயங்கும். பள்ளிகள், கல்லூரி பயிற்றுநர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடக்கம்
புதுச்சேரியில் மூன்றாம் அலை கரோனாவை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில், தேவைப்பட்டால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் ரூ. 260 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதற்காக நேரு வீதி உள்ளிட்டவற்றில் மின் விளக்குகள் மாற்றப்பட்டு வருகின்றன. பழமை வாய்ந்த கட்டடங்களை, அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கடற்கரை சாலையை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல்
வருகின்ற செப்டம்பர் 26ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குகிறது. அன்றைய தினம் மாலையில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்'' என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, உதவி ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்