சட்டப்பேரவையில் மின்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் ஏற்கனவே உள்ள திட்டம் குறித்து எதுவும் இல்லை. 700 கிணறுகள் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அவர்கள் பணியை தொடங்கினால் என்ன செய்வது? அதற்கும் இந்த சட்டத்தில் ஏதாவது கொண்டு வந்திருக்கலாமே என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அதனடிப்படையில்தான் இது கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் முழுமையாக சட்ட பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம். அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏதேதோ துருவி துருவி கேட்கிறீர்கள்.
நாடாளுமன்றத்திலேகூட பேசிப் பார்த்தீர்கள். மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரே தெளிவுபடுத்திவிட்டார். நேற்றுகூட உங்கள் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார். இச்சட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி தேடித்தேடி பார்த்தாலும் எந்த ஓட்டையும் இருக்காது என்றார்.