சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம் விரிவாக்கம், சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4ஆவது ரயில் வழித்தடம் தொடக்கம், விழுப்புரம்-தஞ்சாவூர்-திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதை தொடக்கம், அர்ஜுன் மார்க் 1ஏ ரக கவச வாகனத்தை இராணுவத்திடம் ஒப்படைப்பு, கல்லணை கால்வாய் புதுப்பித்தல், நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகிய திட்டங்களை கணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி, ஐஎன்எஸ் அடையாறு கப்பல் தளத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் 10 நிமிடம் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்களை அறிவித்ததற்கும், புதிதாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததற்கும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும்,தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.