மத்திய அரசின் 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட் உரையில் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கொள்கைகளோடு வகுக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் சமர்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரத் மாலா திட்டத்தின் இரண்டாவது கட்டமாக சாலைகளை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டிலேயே அதிகபடியான சாலைகளை கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் பணிக்கான ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒப்புதல் வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முதலமைச்சர் விடுத்தார்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை வரவேற்ற முதலமைச்சர் பழனிசாமி, சிறு குறு வணிகர்களுக்கான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளும் சிறந்தவை என்று குறிப்பிட்டிருந்தார். இறுதியாக தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை பாடியதற்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.