முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக அரசு பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ் பள்ளிகளைத் தொடங்கி, பல ஆண்டுகளாக தமிழ் மாணவர்கள் அங்கு தங்கள் தாய் மொழியில் படித்துவருகின்றனர். மேலும், பல்வேறு தனியார் தமிழ் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், மானியங்களையும் கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்பவும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்கவும் மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில வளர்ச்சி, பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் தமிழர்கள், கோலார் தங்க சுரங்கங்கள், ஹட்டி தங்க சுரங்கங்கள், சந்தூர் மாங்கனீசு சுரங்கங்கள் ஆகியவற்றை வளர்ப்பதிலும் மகத்தான பங்களிப்பை அளித்துவருகின்றனர். மேலும், சிக்மகளூரு, மங்களூருவில் உள்ள காஃபி தோட்டங்கள், கட்டுமான துறை, வேளாண் துறை ஆகியவற்றிலும் தமிழர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
எனவே, தமிழ் பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், அண்மையில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறத்தல், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க அங்கீகாரத்துடன் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 7 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட அனுமதி!