சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைக் கொத்தளத்தில், முதலமைச்சரான பின் முதல்முறை மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார்.
அதன் காரணமாக, கோட்டை கொத்தளத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நீதிபதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அலுவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
அவர்கள், விழா நிகழ்ச்சிகளைக் காண ஏதுவாக மூன்று பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று காலம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் விழா நடைபெற உள்ளது.
இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறை அலுவலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்க உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று, நேற்றுடன் 100 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் முதல்முறை கொடியேற்ற உள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திமுகவினர் உள்ளனர்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி