சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (ஆக. 17) தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துப் பதிவில்," திராவிடச் சிறுத்தை சகோதரர் தொல். திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணனுக்கு நன்றி
இதற்கு தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர் வழியாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி" எனக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்தது. அந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலிலும் விசிக, திமுக கூட்டணியில்தான் போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில், விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- சாதி வெறியர்களின் கொண்டாட்டம் அநாகரீகம்- தொல். திருமாவளவன்!