வசந்தகுமார் மறைவு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த வசந்தகுமார், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர். ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றியவர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்பட மக்கள் பணியாற்றியவர். இவர் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களின் அன்பைப் பெற்றவர்.
வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்" என அதில் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
அவரது இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!