சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட ஏழு மண்டலங்கள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதால், அங்கிருந்த நிரந்தர தூய்மைப் பணியாளர்களை மீதமுள்ள மண்டலத்துக்கு மாற்றுமாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இதனால், மண்டலம் 14இல் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் மண்டலம் 8க்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து மாநகராட்சி நீக்கியது.
இதை கண்டித்து, நேற்று (ஜனவரி 11) சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை, காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீண்டும் ஒப்பந்த பணியாளர்களாகவே தனியார் நிறுவனம் சிபாரிசு செய்வதால், அங்கு பணியை தொடரலாம் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஒப்பந்த தொழிலாளர்கள், தாங்கள் இருந்த மண்டலத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் 10 ஆண்டுக்கும் மேல் ஒப்பந்த பணியாளர்களாக இருப்பதால், தங்களுக்கு ஒரு தொகையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுத்ததால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் இன்று (ஜனவரி 12) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.