சென்னை: ஜாபர்கான் பேட்டை அன்னை சத்தியா நகர் 6வது தெருவை சேர்ந்தவர்சிவில் என்ஜினியர் பாலாஜி(25). அதே பகுதியில் வசிக்கும் சினிமா எலக்ட்டீரிசியன் கோபி மற்றும் கல்லூரி மாணவன் ஜனேஷ்வரன்(20) ஆகியோர் நேற்று இரவு பாலாஜி வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், பாலாஜியின் நண்பர் மணியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பாலாஜியின் தந்தை கோபால் பிரகாஷை தட்டி கேட்டுள்ளார். உடனே அங்கிருந்த பிரகாஷ்சின் நண்பர்கள் அவர்களிடம் சண்டையிட்டதால் பாலாஜி மற்றும் பிரகாஷ் நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த பாலாஜியின் சகோதரர் பரத் உடனே வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்து பிரகாஷ் ஆதரவாளர்கள் மீது வீசியுள்ளார். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கே.கே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், தகவல் அறிந்து அங்கு சென்ற எம்ஜிஆர் நகர் போலீசார் கூட்டத்தை கலைத்து அவர்களை விரட்டி அடித்ததுடன் பாலாஜி, ஜனேஷ்வரன், கோபி ஆகிய 3 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒரே தெருவில் வசிக்கும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அன்று முதல் பாலாஜி நண்பர்களுக்கும், பிரகாஷ் நண்பர்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்யா நகர் 2வது தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாலாஜியின் வீட்டின் முன்பு மேளம் அடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு பிரகாஷ் பாலாஜியின் நண்பர் மணியிடம் தகராறில் ஈடுபட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பாலாஜி, ஜனேஷ்வரன், கோபி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய பாலாஜி நண்பர்கள் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதான பாலாஜியின் தந்தை கோபால் சிஐடியு கட்சியில் விருகை பகுதி துணைத்தலைவராக உள்ளதால் இன்று காலை போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்ததையடுத்து அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தேச பாதுகாப்பிற்கு எதிரான கருத்தை வெளியிடும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்... எல். முருகன் எச்சரிக்கை