தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15ஆம் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று இரவு, சென்னை கேகே நகர் சிவலிங்கபுரத்தில் 131ஆவது வட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் போரூர் தினகர், தலைமை கழகப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய தீப்பொறி செல்வதாஸ், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது குடிபோதையில் இருந்த ஒருவர், "எங்கள் தலைவரை அவதூறாகப் பேசக்கூடாது" என்று கூறி ரகளையில் ஈடுபட்டார்.
உடனடியாக அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். உடனடியாக காவல் ஆய்வாளர் சீனிவாசன் காவல் துணை ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் போதையில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான ஆசைத்தம்பி (40) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தேமுதிக, திமுக நிர்வாகிகள், சென்னை கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்க: