சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “குடியுரிமைச் சட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது எனவும் ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது என்றும் உள்ளது. இது அப்பட்டமாக இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் செயல்.
இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்தும், அதை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு இரண்டு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்கிறது. ஆனால், மோடி அரசு இந்துத்துவா கொள்கையை நிறைவேற்றுகின்ற வகையில், இஸ்லாமிய மக்களை புறக்கணித்து இச்சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
பஞ்சாப், கேரளா, வங்கதேச மாநில முதலமைச்சர்கள் அவரவர் மாநிலங்களில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதியாகக் கூறியுள்ளனர். நானும் உறுதியாகக் கூறுகிறேன். மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் இச்சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
மத்திய அரசு இந்திய ஜனநாயகத்தை மீறி, இந்திய அரசியல் அமைப்பை மீறி, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்று நாட்டை பிரித்தாளுகிறது. மதச்சார்பற்ற இந்திய நாட்டில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டத்தை முழுமையாக நாங்கள் புறக்கணிக்கிறோம் “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - போராட்டக்களமாக மாறிய பல்கலைக்கழகம்!