மத்திய அரசைக் கண்டித்து 2017ஆம் ஆண்டு, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ. கவுதமன் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன்,
"சமீபகாலமாக அமைச்சர் கே. பாண்டியராஜன் தமிழ்மொழியை, தமிழ் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிற நிலையை ஏற்படுத்திவருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்குத்தான் அவர் அமைச்சராக உள்ளார். ஆனால், சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரதப் பண்பாடு, பாரத கலாசாரம் என்று சொல்வதெல்லாம் முறையல்ல, சரியல்ல.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழ் வளர்ச்சிக்காகத்தான் அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா கொண்டுவந்தார். இதில் இந்தியை திணிப்பது, அதை எதிர்த்தால் தெலுங்கு, பிரெஞ்சு மொழியை கற்றுத் தருவதெல்லாம் அண்ணாவிற்கும் தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இது புரட்சியாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.
தெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொன்ற காட்டுமிராண்டிகளுக்குத் தண்டனைக் கொடுத்ததில் மாறுபட்டக் கருத்தில்லை. ஆனால், அதிகாரம், பண வசதி படைத்த பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பேருந்தில் கத்தியுடன் சென்ற மாணவர்களின் கை, கால்களை உடைத்த காவல் துறை, பெண் பிள்ளைகளை கதற கதற கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்போகிறது. தெலங்கானாவில் நடந்த தண்டனையை போல் அவர்களுக்குத் தர தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் வகையிலேயs மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதைத் தமிழ்நாடு அரசு எப்படி வேடிக்கை பார்க்கிறது எனத் தெரியவில்லை. மீதமுள்ள ஓராண்டிலாவது தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மொழிவெறுப்பு அரசியலை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பாண்டியராஜன்