இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனையோ நபர்கள் போராடியிருக்கிறார்கள். ஆனால் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அதனை நவீன இந்தியாவாக உருமாற்ற நேரு என்ற ஒற்றை நபர் தீவிரமாக போராடினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையோடு தேசியக் கொடியை ஏற்றிய நேருதான், இந்தியாவை நவீனமயமாக்கப்போகிறோம் என்று தற்போது மார்தட்டிக் கொள்பவர்களுக்கு முன்னோடி.
நேரு நவம்பர் 14, 1889ல் பிறந்தார். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையையும், ஜனநாயகத்தையும் தனது முழு மூச்சாகக் கொண்டவர். அதுமட்டுமின்றி சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஏராளமான முறை சிறை சென்றிருக்கிறார். சிறைதான் ஒரு சாதாரண தலைவரை அசாதாரண தலைவராகவும், சாதாரண மனிதனை அசாதாரண எழுத்தாளனாகவும் மாற்றும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் நேரு.
சிறைக்குள் இருந்தவாறு அவர் தனது மகளான இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்த எழுத்துகள்தான் இந்திரா காந்தி என்ற சிறுமியை இரும்புப் பெண்மணியாக மாற்றின.
நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது என்பதை உணர்ந்த நேரு, அந்த இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். முக்கியமாக குழந்தைகளை அவர் நேசித்த விதம் அலாதியானது. அதனால்தான் உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் மட்டும் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் - நவீன இந்தியாவின் இளைஞர்களாக உருவாக அவர்களுக்குக் கல்வி அளவில் முன்னேற்றம் அவசியம் என்பதை உணர்ந்த நேரு நாடு முழுவதும் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்காக செய்த முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. நாட்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் கட்டப்பட்டன. தனது பதவிக் காலத்தில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க இலவச உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தையும் நேரு தொடங்கினார். முதியோர் கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, அவரது ஆட்சிக் காலத்தில்தான் பல உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. நேரு இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை நிறுவப்பட்டன.
1964இல் நேருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மே 27ஆம் தேதி மதியம் அவர் உயிரிழந்தார். அவரது நினைவாக பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இதில் முரண் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகச்சிறந்த ஜனநாயகவாதியான நேருவின் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில்தான் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுவது மட்டும் அவருக்கு இந்த நாடும், நாமும் செய்யும் மரியாதை இல்லை. அவர் அதிகம் நேசித்த குழந்தைகளிடம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சொல்லித் தராமல் அனைவரும் இங்கு சமம் என்ற சமத்துவத்தை போதித்து வளர்ப்பதே அவருக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை.
நேரு இறப்பதற்கு முன்னதாக இப்படி கூறினார், ”எனது உடலை எரியூட்டுங்கள். அஸ்தியில் கையளவு எடுத்து, கங்கையில் கரைக்க வேண்டும். கங்கையில் கரைக்கப்படும் அஸ்தி, இந்தியக் கரைகளைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, அலைகின்ற கடலுக்குள் அடித்துச் செல்லப்பட வேண்டும்”. ஆம், தற்போது அழுக்குகள் சூழ்ந்திருக்கும் இந்தியக் கரைகளை தூய்மைப்படுத்த நேருவின் அஸ்தியை குழந்தைகளின் மனதில் கரைத்து அதனை அடித்து செல்லப்படாமல் பாதுகாத்து வையுங்கள். அதுதான் தற்போதைய அவசியத் தேவை.