கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு மத்தியில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரவுள்ளது.
ஒவ்வொரு முறை ஊரடங்கின்போதும் அது முடிவுக்கு வரும் முன் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். பின்னர் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார்.
அதன்படி, தலைமைச் செயலர் சண்முகம் கரோனா தொற்று அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் பணீந்தர் ரெட்டி, டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மண்டல சிறப்பு குழுவுடன் தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.