கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில், 2.5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து வந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவற்றை திறப்பது தொடர்பாக சுகாதாரத் துறை, கல்வித் துறை, வருவாய்த்துறையுடன் ஆலோசித்த பின், முதலமைச்சர் முடிவெடுப்பார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம், 300க்கும் அதிகமான அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் வகுப்புகளில் அரசின் விதிமுறைகளை தனியார் பள்ளிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அரசின் கல்வி தொலைக்காட்சியில் எடுக்கும் பாடங்களை ஒட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும். காது கேட்க இயலாத மாற்றுத்திறன் மாணவர்களுக்காகவும் கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
தேசிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து, மண்டல அளவில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். அக்கருத்துகளின் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கை குறித்து அரசு முடிவு செய்யும் ” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம்!