கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.இந்த நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததால், நவம்பர் 9ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது.
சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த இருவேறு கருத்துகளையும் கல்வித் துறை ஆராய்ந்து 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள், பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதித்திருந்தது. அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் இந்த உத்தரவை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி - கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், பள்ளி - கல்லூரிகள் திறப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தற்பொழுது தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளி கல்லூரி திறப்பிற்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சுத்தம்செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.500 ஒதுக்கீடு