சென்னை: கோடம்பாக்கத்தை சேர்ந்த சக்தியின் மகள் சிந்து. கடந்த 2020 டிசம்பரில் அருகில் நண்பர் வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து உயிர் தப்பிய சிந்து, இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார். இதனையடுத்து சிந்துவின் 12 ஆம் வகுப்பை ஆசிரியர்கள், அவரின் உறவினர் உதவியுடன், வீட்டில் இருந்தபடி படித்து, பொதுத்தேர்வினை எழுதினார்.
இதுகுறித்து வெளியான செய்தியை தொடர்ந்து, மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிந்து 19 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கீழே விழுந்த பின் கால் முறிந்ததால், எழுந்து நடக்க முடியாமல் இருந்தவருக்கு மருத்துவர்கள் நேற்று முன் தினம்(மே.25) நடப்பதற்கான பயிற்சியை அளித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் நேரில் சந்தித்து மாணவி சிந்துவிற்கு ஆறுதல் கூறினார்.
அப்போது மாணவி சிந்து முதலமைச்சர் முன் நடந்து காண்பித்தார். மேலும் சென்னை அரசு பல் மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி சிந்துவிற்கு வாயில் முகசீரமைப்பு பணியை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். தற்பொழுது சிந்துவிற்கு வாயில் பற்களை பொருத்துவதற்காக மெழுகுப் பல் பொருத்தி உள்ளனர்.
அதன் பின்னர் மாணவிக்கு செயற்கை பற்கள் பொருத்தப்படும் எனவும், அவரை சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் விமலா தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!