இது தொடர்பாக மாணவி நேத்ராவிற்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை-வண்டியூர் முக்கியச் சாலையில் முடித்திருத்தகம் நடத்திவரும் மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை அவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்கள், காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்குச் சேமித்துவைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும். நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மாணவி நேத்ரா மற்றும் அவரது பெற்றோரின் இக்கொடையுள்ளத்தை, கடந்த 31 ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதேபோல், ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு, மாணவி நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவித்ததோடு, பரிசுத் தொகையும் அளித்து சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா!