புதுச்சேரி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்துவருகிறது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் www.padmaaward.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் பத்ம பூஷண் விருதுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியத் தலைவர் சுப்பராயன் பரிந்துரை செய்துள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டு பத்ம பூஷண் விருதுக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பத்ம பூஷண்
இது மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். இது முதன் முதலில் 1954 ஜனவரி 2 அன்று நாட்டின் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.
எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதுவரை இவ்விருதை 49 தமிழர்கள் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: இதுதான் முதல்முறை!