சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்றிரவு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இன்று காலையில் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல், காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். அன்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தலைமை செயலகம் வருமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது குறித்தும், இடைக்கால பட்ஜெட், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள பயிருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமி பிரதமரை சந்தித்தது தன்னை காத்து கொள்ளவே’