சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட எல்லைக்குள் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. குறிப்பாக ஓஎன்ஜிசி கச்சா எடுக்கிறோம் என்கிற பெயரிலும், மூடப்பட்ட கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்கிற அடிப்படையில் பல்வேறு அனுமதிகளை பெற முயற்சித்தாலும் முதலமைச்சர் அதற்கு நிரந்தர தடை விதித்து விட்டார்.
எனவே ஏற்கனவே அனுமதி பெற்றோம் என்கிற பெயரில் புதிதாக கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்டுள்ள கிணறுகளை மறு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் அனுமதிக்க கூடாது எனவும் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பெரியகுடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கிற ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு பேரழிவு ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அக்கிணறை நிரந்தரமாக மூடாவிட்டால் அப்பகுதியில் வெடித்து சிதறி பேரழிவு ஏற்படும் நிலை உள்ளது. அதனை நிரந்தரமாக மூடி விட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். கிணற்றை மூடுவதற்கு அப்பகுதி விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதனை ஏற்று முதலமைச்சருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கும் விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு